menu






  இலக்கியம >> கட்டுரை
இலக்கிய பரப்பில் ஜெயகாந்தனின் இடம் எது?

ஜெயகாந்தனின் எழுத்தில் தீவிர வாசகருக்கு என்ன பிரச்சனை? கீழ்கண்ட வரிகளைப் பாருங்கள்.
'ஏ! தென்றலே எங்கே ஓடுகிறாய் ...உனக்கேன் இத்தனை வேகம்...என்னோட இரேன்..உஹீம்...உன்னை விடமாட்டேன்" என்று துள்ளிக் குதித்துத் தென்றலைத் தழுவுகிறாள் அலைமகள்... (நிறுத்தக் குறிகள் கதாசிரியர் போட்டவை)

இது அவரது முதல் கதையான 'சாந்தி பூமியில் (1954) வரும் வரிகள். இத்தகைய வரிகளைப் படிக்க எனக்கு மிகுந்த கூச்சம் ஏற்படும். இன்னொரு உதாரணம்.

இயற்கை அன்னை அதைச் சகிக்கமாட்டாள். ஜீவனென்னும் பால் சுரந்த ஸ்தனங்களை அறுக்க முயன்றால் அவள் நெஞ்சத் துடிப்பின் அதிர்ச்சியிலே. அந்த வெம்மையிலே பொடி சூரணமாகி விடுவீர்கள்..." (அதே கதை)
வாசகர்களின் இலக்கிய ரீதியான பிரக்ஞையை. பக்குவத்தை மதிக்கும் இரு எழுத்தாளரால் இத்தகைய வரிகளை எழுத முடியும் என்று தோன்றவில்லை. ஜெயகாந்தனின் சிறுகதைகளிலிருந்து இதுபோன்ற ஆயிரக்கணக்கான வரிகளைத் தொகுக்கலாம்.

வாசகருக்குப் போதனை செய்வது ஜெயகாந்தன் சிறுகதைகளின் ஆதாரமான குணம். நீதிபோதனைகளைச் செய்ய வேண்டுமென்ற துடிப்பை ஆரம்ப நிலை எழுத்தாளர்களின் ஆர்வக் கோளாறின் வெளிப்படாகப் புரிந்துகொள்ள முடியும். 1954-ல் எழுத ஆரம்பித்த ஜெயகாந்தன் 1950களில் தொடக்கம் வரை சிறுகதைகளை எழுதிவந்திருக்கிறார். வாசகர்களுக்குப் புத்திமதி சொல்ல வேண்டும் என்ற அவரது துடிப்பு கடைசிவரை இருந்ததாகத் தெரியவில்லை.

இதை அவரே வெளிப்படையாக ஒப்புக்கொள்வதுடன் இதில் என்ன தவறு என்று மீசையையும் முறுக்குகிறார்.
"...விமர்சக நண்பர் நான் கதையைவிட அதிகமாகத் தத்துவ விளக்கங்களும் இதோபதேசமும் செய்வதாகக் கருதுகிறார். யோசித்துப் பார்த்தால் வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதனும் இன்னொரு மனிதனுக்கு எதையோ உபதேசம் செய்து கொண்டிருக்கிறான் என்பது புலனாகும். ஏன்? இந்த நண்பர் எனக்குச் செய்ய முயல்வதும் அதுதான். சமூக வாழ்க்கையில் தனிமனிதனின் நடை முறையும் இதுதான். சமூக ஜீவிகளின் கூட்டான லட்சியமும் இதுதான்." (புதியவார்ப்புகள் முன்னுரையில் - 1965)

வாழ்க்கையில் உபதேசம் செய்வதற்கும் இலக்கியத்தில் உபதேசம் செய்வதற்கும் இடையில் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. படைப்பிலக்கியம் என்பது எழுத்து சார்ந்த ஒரு கலை. கலையின் ஆதாரமான அம்சமே அது வெளிப்படையாகப் பேசுவதைக் கூடியவரை குறைத்துக் கொள்ளும் என்பதுதான். தர்க்க ரீதியான வாதப்பிரதிவாகங்களுக்கும் போதனைகளுக்கும் வேறு பல துறைகளும் தளங்களும் இருக்கின்றன.

 

பின்னே

Top

முன்னே