|
பனிரெண்டாம் வகுப்பில் தமிழ்ப் பாடத்தின் துணைப் பாட நூல் என்பது
எனக்கு ஒரு சிறுகதைத் தொகுப்பு. புதுமைப்பித்தன், மு. வரதராசனார்,
கல்கி, ஜெயகாந்தன், ஜெகசிற்பியன் என்று கலவையான ஒரு தொகுப்பு அது.
அதில் இரண்டு சிறுகதைகள் என்னை மிகவும் கவர்ந்தன. ஒன்று
புதுமைப்பித்தனின் 'ஒரு நாள் கழிந்தது' இன்னொன்று 'நந்தவனத்தில் ஒரு
ஆண்டி'. இப்போது சுமார் இருபது ஆண்டுகள் கழித்து. இந்த இரு
கதைகளையும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் படிக்க நேர்ந்தது.
புதுமைப்பித்தனின் 'ஒரு நாள் கழிந்தது' இப்போதும் என்னைக் கவர்கிறது.
நவீனத் தமிழ்ச் சிறுகதையின் முன்னோடிக் கதைகளில் ஒன்றாக இன்றளவும் இது
உயிர்ப்போடு இருக்கிறது.
ஆனால் 'நந்தவனத்தில் ஒர் ஆண்டி' இப்போது தருவது பெரும் ஏமாற்றத்தை.
கதை எளிமையான ஒரு சூத்திரத்திற்குட்பட்டு இயங்குகிறது. குழந்தைகளின்
பிணங்களைப் புதைப்பதைத் தன் தொழிலாகக் கொண்ட ஒருவன் சாவு-அதிலும்
குழந்தைகளின் சாவு-பற்றிய பிரக்ஞை சிறிதுமின்றித் தெம்மாங்கு பாடியபடி
தன் தொழிலைச் செய்கிறான். கடைசியில் ஒரு நாள் அவன் குழந்தையே இறந்து
விடுகிறது. அப்போதுதான் சாவு பற்றியும் இழப்பின் துக்கம் பற்றியும்
அவன் உணர்கிறான். தலைவலியும் திருகு வலியும் தனக்கு வந்தால் தான்
தெரியும் என்ற எளிய பழமொழயின் சூத்திரத்திற்குள் புதிய சலனங்கள்
எதையும் எழுப்பாமல் இயங்குகிறது இக்கதை. கதை முழுவதும் இரைச்சல். மிகு
உணர்ச்சி ஊதாரித்தனமான வார்த்தைப் பிரயோகம்.
'நந்தவனத்தில் ஓர் ஆண்டி'ஜெயகாந்தனின் நல்ல கதைகளில் ஒன்று.
134 சிறுகதைகள் சுமார் 1700 பக்கங்கள் இரண்டு பாகங்கள் ஜெயகாந்தன்
சிறுகதைகளை ஒட்டுமொத்தமாகப் படித்து முடித்துப் பெருமூச்சு விட்டு
ஆசுவாசப்படுத்திக் கொண்ட பிறகு அவரது சிறுகதைகள் தரும் ஒட்டுமொத்தமான
அனுபவம் பற்றி யோசித்துப் பார்க்கிறேன். விடலைப் பருவத்தில் இவரைப்
படித்த போது ஏற்பட்டிருந்த பரவசம் முற்றாகக் காணாமல்
போய்விட்டிருந்தது. வெகுஜன தளத்தில் சிறப்பாகவும் தீவிரமாகவும்
இயங்கிய ஒரு சில எழுத்தாளர்களில் இவரும் ஒருவர் என்ற எண்ணமே
பிரதானமாக மேலெழும்புகிறது. எனவே அவரது கதைகள் பற்றி. தீவிர
இலக்கியத்திற்கு முக்கியத்துவம் தரும் இதழ் ஒன்றிய விமர்சனம் எழுத
வேண்டிய அவசியம் எதுவும் கிடையாது. ஆனால் ஜெயகாந்தன் வெறும்
எழுத்தாளர் மட்டுமல்ல எழுத்துலகில் முக்கியமான ஒரு ஆளுமை. முற்போக்கு
இலக்கியத்தில் ஆதர்சமாக முன்னிறுத்தப்படுபவர். தீவிர இலக்கிய
வாசகர்கள். வெகுஜன வாசகர்கள் என்ற இரு தரப்பினருக்குமான எழுத்தாளர்
என்று புகழப்படுவர். ப. ஜீவானந்தம். கா. சிவத்தம்பி போன்றோரால்
பாராட்டபட்டவர். 'எழுத்தாளர்களின் எழுத்தாளர்' என்று அவரது
சிறுகதைகளின் மொத்த தொகுப்பிற்கு முன்னுரை எழுதியிருக்கும்
நவபாரதியால் ஆராதிக்கப்படுவர். அவரது வாசக வட்டம் சாதி, மத, வர்க்க,
மத பேதங்களைக் கடந்தது. எனவே அவரை விமர்சனபூர்வமாக அணுகுவது என்பது
ஒரு சூழலில் நிலவும் ஒருவித அணுகுமுறையைப் புரிந்து கொள்ளும்
முயற்சியாகவே அமையும் என்பதால் அவரது கதைகளைக் பொருட்படுத்திப் பேச
வேண்டியிருக்கிறது.
|